சேலம் அருகே கல்லூரி மாணவர்களை மிரட்டி பணம் பறித்த கும்பலைச் சேர்ந்த இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் கோயில் அருகே அரசு கலைக்கல்லூரி உள்ளது. கல்லூரிக்கு வரும் மாணவ, மாணவியர்கள் மற்றும் வடசென்னிமலை முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களை, மர்ம கும்பல் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து வந்துள்ளது. இதுதொடர்பாக ஆத்தூர் போலீஸாருக்கு புகார் வந்ததை அடுத்து, காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் விசாரணையில் ஈடுபட்டனர்.
கல்லூரி மாணவர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் குறித்து போலீஸார் விசாரித்ததில், காட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தங்கும் விடுதி துப்புரவு பணியாளர் வினோத், நடுவலூர் பகுதியைச் சேர்ந்த சின்னுசாமிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்து, விசாரணை செய்தனர். வழிப்பறி சம்பவத்தில் கடம்பூரைச் சேர்ந்த முருகேசனுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, தலைமறைவாக உள்ள முருகேசனை போலீஸார் தேடி வருகின்றனர். மேலும் வழிப்பறியில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.