Regional03

சேலம் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்றவர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்றவர்கள் உதவித்தொகை பெற விண்ணப் பிக்கலாம்,’ என ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் ராமன் தெரிவித்ததாவது:

படித்த வேலை வாய்ப்பற்றோருக்கு மாதம்தோறும் அரசு உதவித் தொகை வழங்கி வருகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, பிளஸ் 2 படித்தவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு ரூ.600, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750 பட்டதாரிகளுக்கு ரூ.1000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் வரும் மார்ச் மாதத்துடன் முடிவடையும் காலாண்டுக்கு தகுதியுடைய வேலைவாய்ப்பற்றவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசமாக வழங்கப்படும். இதனைப் பெறுவதற்கு தங்களின் பழைய வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் புதிய ஆன்லைன் அடையாள அட்டை போன்ற அனைத்து அசல் சான்றுகளுடன் நேரில் வந்து சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தொடங்கப்பட்ட கணக்கு புத்தகம் மற்றும் பிற சான்றுகளுடன் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மார்ச் 31-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை நேரில் வழங்க வேண்டும். மேலும், www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது நேரில் வந்து சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT