Regional01

சங்கரன்கோவிலில் திமுக சார்பில் மக்கள் சபை கூட்டம்

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவபத்மநாதன் தலைமை வகித்தார். ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா, முன்னாள் அமைச்சர் தங்கவேலு ஆகியோா் முன்னிலை வகித்தனர். சங்கரன்கோவில் நகர செயலாளர் சங்கரன் வரவேற்றார்.

கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள் கூறும்போது, “சங்கரன்கோவில் தீப்பெட்டி தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கரன்கோவில் பகுதிகளில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணவும், மோசமாக உள்ள சாலைகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தில் முறைகேடுகளை தடுக்க வேண்டும்.

கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டதால் மகளிர் சுய உதவிக் குழுக்கள் வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். அழியும் நிலையில் உள்ள நெசவுத் தொழிலை பாதுகாக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

கோரிக்கைகள் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் எடுத்துக் கூறி திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றநடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக நிர்வாகிகள் கூறினர். நகர இளைஞரணிச் செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT