Regional02

சாலை விதிகளை மதித்து நடப்பதாக உறுதிமொழியேற்று கையெழுத்து

செய்திப்பிரிவு

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, `சாலை விதிகளை மதித்து நடப்போம்’ என, வாகன ஓட்டிகள் உறுதிமொழியேற்று, கையெழுத்திடும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பில் நேற்று நடைபெற்றது.

'இரு சக்கர வாகனம் ஓட்டுபவர் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர் என இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்வோம். வாழ்நாள் முழுவதும் சாலை விதிகளை மதித்தும், எனக்கோ என்னால் பிறருக்கோ, விபத்து ஏற்படாதவாறு வாகனம் ஓட்டுவேன்.

இனிவரும் சந்ததிகளுக்கு முன்னுதாரணமாக செயல்படுவேன்' என்று, வாகன ஓட்டிகள் உறுதிமொழியேற்று, கையெழுத்திட்டனர்.

மாவட்ட காவல் கண்காணிப் பாளர் எஸ் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். டிஎஸ்பி கணேஷ், ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவல்துறை அதிகாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில்

ஆட்சியர் மா.அரவிந்த் அறிக்கை: மக்களிடையே சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சாலை பாதுகாப்பு மாத விழா கொண்டாடப்படுகிறது.

இன்று (23-ம் தேதி) சுங்கச் சாவடிகளில் வாகன ஓட்டுநர்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 25-ம் தேதி இணையதளம் வாயிலாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

27-ம் தேதி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், 29- ம் தேதி நாகர்கோவில், மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கண் பரிசோதனை முகாம் நடத்துதல் என, பிப்ரவரி 17-ம் தேதி வரை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT