Regional01

கோவை மாவட்டத்தில் 7 அரசுப் பள்ளிகள் தரம் உயர்வு

செய்திப்பிரிவு

இதுகுறித்து கோவை மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் 50 அரசு நடுநிலைப் பள்ளிகளும், 50 உயர்நிலைப் பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதன்படி, கோவை மாவட்டத்தில் ஆனைமலை ஒன்றியம், அங்கலக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பொள்ளாச்சி வடக்கு ஆர்.கோபாலபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, குனியமுத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகிய 3 பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

இதேபோல, மணியகாரன்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, தீத்திப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி, கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் சுல்தான்பேட்டை ஜெ.கிருஷ்ணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய 4 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

இப்பள்ளிகளில் புதிதாக ஆசிரியர், தலைமை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. விரைவில் மாணவர் சேர்க்கை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி முடித்து, பிளஸ் 1 வகுப்புக்கு வேறு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்கள், மீண்டும் பழைய பள்ளியில் கல்வி தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT