ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான அட்டவணை இம்மாத இறுதியில் வெளியிடப்பட்டு, உடனடியாக தேர்வு நடத்தப்பட்டு பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும், என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோட்டில் பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில், பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக அரசுப் பள்ளியில் படித்து, இட ஒதுக்கீடு மூலம் மருத்துவக் கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கான கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்றுக் கொண்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வரும் நிலையில், அதற்குப் போதுமான அளவு ஆசிரியர்களை நிரப்புவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். இம்மாத இறுதியில் ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு, உடனடியாகத் தேர்வு நடத்தப்பட்டு பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும்.
காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கடந்த 2013 மற்றும் 2014, 17-ம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு பணியிடங்கள் வழங்கப்படும். காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பள்ளிகளுக்குத் தேவையான அலுவலக ஊழியர்கள், உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப ஒப்புதல் வழங்கப்பட்டு அதற்கான ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மத்திய அரசிடம் இருந்து ரூ.500 கோடி நிதியுதவி பெற்று, அனைத்துப் பள்ளிகளிலும் மாணவிகளுக்கான கூடுதல் கழிப்பறைகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு வழங்கப்படும் மடிக்கணினிகளை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகமே தேர்வு செய்து வாங்குகிறது. அவற்றின் தரம் குறித்து அந்தத் துறை அமைச்சகத்திடமே கேட்க வேண்டும், என்றார்.
பண்ணாரியம்மனுக்கு ராஜகோபுரம்
ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, ‘பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் அமைப்பதற்கான ஆய்வுகள் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.