அதிமுக ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது என்று தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி எம்.பி. குற்றஞ் சாட்டினார்.
தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி எம்பி நேற்று காலையில் கலைஞர் அரங்கில் நடைபெற்ற தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதி திமுகபாக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கந்தசாமிபுரம், லெவிஞ்சிபுரம், ராஜகோபால் நகர் ஆகிய இடங்களில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாம்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் அவர் பேசியதாவது:
ஏற்கெனவே நடைபெற்ற தேர்தல்களுக்கும், விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. தமிழகத்தின் மிகப்பெரும் ஆளுமைகளாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் தற்போது இல்லை. எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக கட்சியாக இருக்கிறதா, உடையப் போகிறதா என்பது தெரியவில்லை. மறுமுனையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இணையான தலைவர் இல்லாத நிலையில் தேர்தலை சந்திக்கிறோம்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில்எல்லா இடங்களிலும் ஊழல் மலிந்துவிட்டது. எந்த வளர்ச்சி திட்டங்களும் கிடையாது. முதியோர் உதவித்தொகை வழங்கக் கூட பணம் இல்லை. மத்தியில் ஆட்சியில் உள்ளவர்களிடம் தமிழகத்தை அடகு வைத்துள்ளனர். இந்த தேர்தலில் தமிழகத்தை மீட்டு எடுக்க வேண்டும். சட்டப்பேரவை தேர்தலில்அதிமுகவினரின் சூழ்ச்சிகள், பொய் பிரச்சாரங்களை முறியடித்து விழிப்போடு பணியாற்ற வேண்டும். மறுபடியும் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கலைஞர் ஆட்சியை உருவாக்கி காட்டுவோம் என்றார்.
முன்னதாக மேலாத்தூர் பகுதியைச் சேர்ந்த இந்திரா, கோவில்பட்டியைச் சேர்ந்த பழனி ஆகிய மாற்றுத்திறனாளிகளுக்கு தனது சொந்த நிதியிலிருந்து இருசக்கர வாகனங்களை அவர் வழங்கினார். நிகழ்ச்சிகளில் பெ.கீதாஜீவன் எம்எல்ஏ, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகரச் செயலாளர் எஸ்.ஆர்.ஆனந்தசேகரன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.