முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் யானைகளுக்கு உணவு ஊட்டுவதை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள். படம்:ஆர்.டி.சிவசங்கர் 
Regional02

உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

செய்திப்பிரிவு

பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகளவில் இருந்தது. பொங்கல் விடுமுறைக்குப் பிறகும் தமிழகம் மட்டுமின்றி கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் உதகைக்கு வந்தவண்ணம் உள்ளனர். குறிப்பாக மலை ரயிலில் முன்பதிவு செய்து உதகைக்கு வருகின்றனர்.

உதகையில் உள்ள அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் 60,000 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். உதகை படகு இல்லம், அரசினர் ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிகரம், மரவியல் பூங்கா ஆகியவற்றுடன் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள சுற்றுலா மையங்களிலும், தனியார் கேளிக்கை பூங்காக்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் மிக அதிகமாக உள்ளது.

கடந்த 9-ம் தேதி திறக்கப்பட்ட முதுமலை புலிகள் காப்பகத்திலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. வாகன சவாரி மற்றும் யானை சவாரி செய்யவும் ஆர்வம் காட்டுகின்றனர்.

கரோனா காரணமாக கடந்தாண்டு கோடை காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு, மலர் கண்காட்சி உட்பட முக்கிய நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT