ரேஷன் கடையில் நுகர்வுப் பொருட்கள் வழங்க வலியுறுத்தி, சேலத்தில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் அம்மாப்பேட்டை கிருஷ்ணாநகரில் உள்ள ரேஷன் கடையில் 500 ரேஷன் கார்டுதாரர்களுக்கு நுகர்வுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று காலை பொதுமக்கள் பொருட்கள் வாங்க நீண்ட நேரம் காத்திருந்த நிலையில், சர்வர் பழுது எனக்கூறி பொருட்களை கடை ஊழியர்கள் வழங்கவில்லை. இதனால், வெறுப்படைந்த பொதுமக்கள் அம்மாப்பேட்டை மெயின் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற அம்மாப்பேட்டை போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று, நுகர்வுப் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.