Regional01

சேலம், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு தொடக்கம்

செய்திப்பிரிவு

சேலம் அரசு மோகன் குமாரமங் கலம் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு நேற்று தொடங்கியது.

கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின்படி, மாணவ, மாணவிகள் முகக்கவசம் அணிந்து நேற்று கல்லூரிக்கு வந்தனர். அவர்கள் அனைவருக்கும் உடல்வெப்பநிலை பரிசோதனை நடத்தி, கைகளை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்த பின்னர் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். முதலாமாண்டு மாணவர்களை மூத்த மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

தொடர்ந்து, முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு, கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் தலைமை வகித்தார். துணை முதல்வர் ரங்கராஜன் முன்னிலை வகித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் தனபால், உறைவிட மருத்துவர் ராணி, கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில், மாணவ, மாணவிகள் மருத்துவச் சேவைக்கான உறுதிமொழியை ஏற்றனர். பின்னர் மாணவர்களுக்கு, பாடத்திட்டம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.

மாணவர்களுக்கு வரவேற்பு

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில், நடப்பு கல்வியாண்டில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு தமிழக அரசு உத்தரவுப்படி நேற்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டன. நேற்று கல்லூரிக்கு வருகை தந்த மாணவ, மாணவியருக்கு கல்லூரி முதல்வர்(பொ) மருத்துவர் இளங்கோவன், துணை முதல்வர் மருத்துவர் முருகன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவர் சந்திரசேகர் மற்றும் இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் ஆகியோர் மலர் கொடுத்து வரவேற்பு அளித்தனர். மாணவ, மாணவியர் கரோனா தடுப்பு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்பறைக்கு 25 பேர் வீதம் அனுமதிக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT