சென்னை உயர் நீதிமன்றத்தில் செம்பியத்தைச் சேர்ந்த கோ.தேவராஜன் தாக்கல் செய்திருந்த மனுவில், ``பெரம்பூர் துளசிங்கம் தெருவில் உள்ள ஆனந்தீஸ்வரர் மற்றும் முனியப்ப நாயக்க தெருவில் உள்ள பழனியாண்டவர் கோயிலுக்கு சொந்தமான குளங்கள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புடைய நிலங்கள் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கவும் குடிநீர் மற்றும் மின் இணைப்புகளை துண்டிக்கவும் நடவடிக்கை எடுக்கக் கோரி அறநிலையத்துறைக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த கோயில் நிலங்களை மீட்டு முறையாக பராமரிக்க அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்'' என அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சத்திகுமார் சுகுமார குரூப் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.