Regional01

ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் ரூ.1.88 லட்சம் மோசடி வங்கி மேலாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் அழகப்பன், ஓய்வுபெற்ற அறநிலையத் துறை ஊழியர். இவர், ஓய்வு பெற்றபோது வழங்காமல் இருந்த பணிக்கொடை நிலுவை தொகையை வழங்க வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிமன்ற உத்தரவின்பேரில், அழகப்பனுக்கு ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 900 ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.

சங்கரன்கோவிலில் உள்ள வங்கி கிளையில் முகவராக பணியாற்றிய முத்துக்குமார் என்பவர், அழகப்பனுக்கு வந்த காசோலையை தனது வங்கி மூலம் மாற்றித் தருவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து, காசோலையை முத்துக்குமாரிடம் கொடுத்துள்ளார்.

அழகப்பனிடம் ஆவணங்களை பெற்று அவரது பெயரில் இந்தியன் வங்கி கிளையில் புதிய கணக்கு தொடங்கிய முத்துக்குமார் காசோலையை செலுத்தி வரவு வைத்துள்ளார்.

இந்நிலையில், ரூ1,88,900-ஐ மற்றொரு வங்கிக் கணக்குக்கு மாற்றி முத்துக்குமார் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது முறையான பதில் அளிக்காததால், சங்கரன்கோவில் டவுன் காவல் நிலையத்தில் அழகப்பன் புகார் அளித்தார்.

முத்துக்குமார், அவரது தந்தை வள்ளிநாயகம் மற்றும் வங்கி மேலாளர் ஆகிய 3 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT