செங்கல்பட்டை அடுத்த காந்தலூர் பகுதியில் உள்ள கல்குவாரி குட்டைகள் ஒவ்வொன்றும் 300 மீட்டர் ஆழம் கொண்டவை. இவற்றில் கன மழையினால் நீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்பவர் நேற்று தன் உறவினர்களுடன் இக்குட்டையில் குளிக்க வந்துள்ளார்.
குளித்துக் கொண்டிருந்தபோது நமீதா(17) மற்றும் ஏஞ்சல் (17) என்ற மாணவிகள் இருவர்குட்டையின் ஆழமான பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அவர்களை காப்பாற்றச்சென்ற அன்சாரியும் அம்மாணவிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தகவலறிந்த செங்கை தாலுகா போலீஸார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கல்குவாரியின் ஆழம் தெரியாமல் இறங்கும் நீச்சல் தெரியாதவர்கள் மூழ்கி இறக்கின்றனர். சிலருக்கு நன்கு நீச்சல் தெரிந்திருந்தாலும், பாறைகள் கிழித்துநீரில் மூழ்கி பலியாகின்றனர். இந்த ஆபத்தான கல்குவாரி குட்டைகளால் தொடர்ந்து உயிர் பலி ஏற்பட்டு வருகிறது.
இதனால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு ஆபத்தான கல்குவாரி குட்டைகளில், பொதுமக்கள் குளிக்காத வகையில் அவற்றைச் சுற்றி வேலி அமைத்து எதிர்காலத்தில் கல்குவாரி குட்டைகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.