Regional02

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒரு நபர் ஆணைய 24-ம் கட்ட விசாரணை தொடக்கம்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் 24-ம் கட்ட விசாரணை நேற்று தொடங்கியது.

தூத்துக்குடியில் கடந்த 2018-ம்ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் வன்முறையில் முடிந்தது. அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இந்த ஆணையம் 23 கட்ட விசாரணையை முடித்துள்ளது. இதுவரை 586 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். 775 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆணையத்தின் 24-ம் கட்ட விசாரணை தூத்துக்குடியில் நேற்று தொடங்கியது. வரும் 22-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இதில் ஆஜராக 56 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இம்முறை, துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்கள், தீயணைப்பு படையை சேர்ந்தவர்களுக்கு சம்மன்அனுப்பப்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் அப்போதைய டீன் உள்ளிட்டோர் நேற்று ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

இன்று (ஜன.19) நடிகர் ரஜினி நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. சம்மனை ரஜினி பெற்றுள்ளார். ரஜினிதனது உடல்நிலையை காரணம்காட்டி இன்று நேரில் ஆஜராகமாட்டார். தனது வழக்கறிஞர் மூலம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT