திருச்செங்கோடு அருகே லாரி மீது வேன் மோதியதில் 7 பேர் படுகாயமடைந்தனர்.
குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (30). இவரது குடும்பத்தினர் உட்பட அப்பகுதியைச் சேர்ந்த மூன்று குடும்பத்தினர் என மொத்தம் 20 பேர் கடந்த 14-ம் தேதி வேன் மூலம் திருச்செந்தூர் சென்றுள்ளனர். நேற்று அங்கிருந்து குமாரபாளையம் புறப்பட்டுள்ளனர். வேனை வெங்கடேசன் ஓட்டி வந்துள்ளார். திருச்செங்கோடு அருகே அத்திப்பாளையம்மேடு என்ற இடத்தில் வந்தபோது முன்னால் சென்ற விறகு லோடு லாரி மீது வேன் மோதியது.
இதில் வெங்கடேசன் (30), யுவராஜ் (27), சொர்ணா (25), இந்திராணி (50), மணிகண்ணன் (35), சத்யப்பிரியா (33), சந்தான கிருஷ்ணன் (52) ஆகிய 7 பேர் படுகாயமடைந்தனர். அனைவருக்கும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். வெங்கடேஸ்வரன் உள்பட 5 பேர் லேசான காயங்களுடன் தப்பினர். அவர்கள் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக திருச்செங் கோடு ஊரக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.