தஞ்சாவூர் கீழவாசல் ஆட்டு மந்தைத் தெருவைச் சேர்ந்தவர் கே.மலையபெருமாள். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர், ஜன.8-ம் தேதி காவல் துறையில் அளித்த புகாரில், ‘‘தனது வீட்டுக்கு காவல் துறையினர் எனக் கூறி வந்த 3 பேர், எங்களுடைய கார் மோதி குழந்தை இறந்துவிட்ட சம்பவத்தில், நான் தலைமறைவாக உள்ளதாகவும், விசாரணைக்கு வர வேண்டும் எனவும் என்னை மிரட்டினர். மேலும், என்னையும், எனது மனைவி, மகள், மகன் ஆகியோரையும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, கட்டிப்போட்டு, நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்" என தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக, தஞ்சாவூர் கிழக்கு இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.
இதில், தென்காசி மாவட்டம் கழுநீர்குளத்தைச் சேர்ந்த சுப்பையா பாண்டியனின் மகன் வைத்தீஸ்வரன் (26) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பொறியியல் பட்டதாரியான வைத்தீஸ்வரன் ராணுவத்தில் 2019 -ம் ஆண்டில் சேர்ந்துள்ளார். பயிற்சியின்போது, ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ராணுவத்திலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். பின்னர், 2020 -ம் ஆண்டில் நடைபெற்ற ராணுவத் தேர்வில் மீண்டும் தேர்ச்சி பெற்று வேலைக்காகக் காத்திருந்ததாகவும், பணம் கொடுத்து வேலையில் சேர மலையபெருமாள் வீட்டில் தனது நண்பர்களுடன் சேர்ந்து நகைகளை கொள்ளையடித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, 9 பவுன் நகைகளை மீட்ட போலீஸார், இதில் சம்பந்தப்பட்ட மற்ற நபர்களை தேடி வருகின்றனர்.