திமுக ஆட்சிக்கு வந்ததும், தூத்துக்குடியில் மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என, கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால் தூத்துக்குடி மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் குளம்போல தண்ணீர் தேங்கி நிற்கிறது. பிரையன்ட் நகர், தபால்தந்தி காலனி, கதிர்வேல் நகர், ஆதிபராசக்தி நகர், கேடிசி நகர், ஸ்டேட் பாங்க் காலனி, லூர்தம்மாள்புரம் பகுதிகளில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல இயலாத அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
சிலர் தங்கள் உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை 150-க்கும் மேற்பட்ட மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. சில இடங்களில் 15 டேங்கர் லாரிகள் மூலம் மழைநீரை உறிஞ்சி வெளியேற்றும் பணியும் நடக்கிறது. மேலும்
8 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஆங்காங்கே தற்காலிக கால்வாய்கள் தோண்டப்பட்டும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த பணிகளை மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் கண்காணித்து வருகிறார்.
இந்நிலையில், தூத்துக்குடி பிரையன்ட் நகரில் மழை வெள்ளம் தேங்கியுள்ள பகுதியை கனிமொழி எம்.பி. பார்வையிட்டார். மழைநீரை வெளியேற்ற ராட்சத மோட்டார்களை பயன்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தனியார் தொழிற்சாலை நிர்வாகிகளை தொடர்புகொண்டு பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தூத்துக்குடியில் மழை நீர் தேங்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தேவை. அதைப்பற்றி அரசாங்கம் சிந்திப்பதில்லை. வடிகால் கட்டுகிறோம் என்ற பெயரில், மிகவும் உயரமாக தடுப்பணைகளை கட்டி வைத்துள்ளனர். மழைநீர் வெளியேற முடியாததற்கு, வடிகால்களை உயர்த்தி கட்டியதே காரணம். திமுக ஆட்சிக்கு வந்ததும், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நியாயமான நிவாரணம் வழங்க வேண்டும் என்றார். பெ.கீதாஜீவன் எம்எல்ஏ உடனிருந்தார்.