ஆத்தூர் அடுத்த கூலமேட்டில் இன்று (17-ம் தேதி) நடைபெறுவதாக இருந்த ஜல்லிக்கட்டுப் போட்டி தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப் பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் சேலம் மாவட்டம் கூலமேட்டில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். வழக்கம்போல, இந்த ஆண்டும் நாளை (17-ம் தேதி) ஜல்லிக்கட்டு நடத்த விழா குழு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
வாடிவாசல், பார்வையாளர் மாடம், மாடுகள் ஓடும் பாதை உள்ளிட்டவை அரசின் வழிகாட்டுதல்படி அமைக்கப் பட்டிருந்தது. இப்பணிகளை ஆத்தூர் கோட்டாட்சியர் துரை, வட்டாட்சியர் அன்புச்செழியன் மற்றும் காவல்துறையினர் ஏற்கெனவே ஆய்வு செய்திருந்தனர். மேலும், விழாக்குழுவினரிடம் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த வழிகாட்டுதல் வழங்கியிருந்தனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக கூலமேடு பகுதியில் மழை பெய்ததால், ஜல்லிக்கட்டு நடைபெற தயார் செய்யப்பட்டிருந்த மைதானமும் சேறும் சகதியுமாக மாறியது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் சேலம் ஆட்சியர் ராமன் ஆய்வு செய்தார்.
மைதானம் சேறாக இருப்பதால், ஜல்லிக்கட்டு நடத்தினால் காளைகளும், மாடுபிடி வீரர்களும் வழுக்கி விழுந்து காயமடைய நேரிடும் என்பதை அறிந்து, மைதானம் சீராகும் வரை, ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, தேதி நிர்ணயிக்கப்படாமல் ஜல்லிக்கட்டுப் போட்டியை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.