சேலம் மாவட்டத்தில் வனத்துறை சுற்றுலா தலங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், கிராமங்களில் காணும் பொங்கல் விளையாட்டுப் போட்டிகளுடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் சேலம் மாவட்டத்தில் வனத்துறை சுற்றுலா தலங்களில் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், காணும் பொங்கலான நேற்று மக்கள் பலர் வனத்துறை சுற்றுலா தலங்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
காணும் பொங்கல் நாளில் மேட்டூர் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் மேட்டூர் கால்வாயில் நீராடி, அணை பூங்காவையொட்டிய முனீஸ்வரன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து குடும்பத்தினருடன் அசைவ உணவுகளை உண்டு மகிழ்வது வழக்கம்.
இந்தாண்டு கரோனா தடுப்பு நடவடிக்கையாக அணை பூங்கா மூடப்பட்டதால், மேட்டூர் அணை பூங்கா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதனிடையே, மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் காணும் பொங்கலை முன்னிட்டு, சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இதில், கிராம மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றும் கண்டும் மகிழ்ந்தனர். மாவட்டத்தில் கடந்த வாரம் முழுவதும் சாரல் மழை நீடித்த நிலையில், நேற்று பகல் முழுவதும் பெரும்பாலான இடங்களில் வெயில் இருந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஏற்காட்டில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மான் பூங்காவைத் தவிர தோட்டக்கலைத்துறை, சுற்றுலா துறை பூங்கா, படகு இல்லத்துக்கு பயணிகளுக்கு தடை இல்லை. எனினும், வனத்துறை சுற்றுலா தலங்களில் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், ஏற்காட்டிலும் பயணிகளுக்கு அனுமதியிருக்காது என்ற அச்சத்தால், வழக்கமான ஆண்டுகளைப்போல இல்லாமல், காணும் பொங்கல் தினமான நேற்று 65 சதவீதம் பயணிகள் மட்டுமே வருகை தந்திருந்தனர்.
இதுதொடர்பாக சுற்றுலாத் துறை அலுவலர்கள் கூறியதாவது:
காணும் பொங்கல் அன்று ஏற்காட்டுக்கு சென்னை, புதுச்சேரி, பெங்களூரு, கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பயணிகள் ஏராளமானோர் வந்து செல்வர்.
எனினும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது.
ஏற்காட்டில் வழக்கமான நாட்களை விட, நேற்று மழை இன்றி இதமான தட்பவெப்பநிலை நிலவியது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.