Regional02

தஞ்சாவூர் மாவட்டத்தில் பயிர் பாதிப்பை கணக்கிடும் பணி ஓரிரு நாட்களில் முடிவடையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தகவல்

செய்திப்பிரிவு

தொடர் கனமழையால் ஏற்பட் டுள்ள பயிர் பாதிப்பு குறித்து கணக்கீடு செய்யும் பணி ஓரிரு நாட்களில் முடிவடையும் என தோட்டக்கலைத் துறை இயக்குநரும், தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான என்.சுப்பையன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 3.38 லட்சம் ஏக்கரில் சம்பா பயிர் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இதில், அறுவடைக்கு தயாராக இருந்த பெருமளவு சம்பா பயிர்கள் தொடர் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று, நிலக்கடலை, எள், உளுந்து பயிர்கள் 2,385 ஏக்கரில் கடந்த மாதம் பயிரிடப்பட்ட பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, தோட்டக்கலைத் துறை இயக்குநரும், தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரு மான என்.சுப்பையன், ஆட்சியர் ம.கோவிந்தராவ், வேளாண்மை துறை அதிகாரிகள் நேற்று சக்கர சாமந்தம் உள்ளிட்ட கிராமங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து, விவசாயிகளிடம் அதன் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் என்.சுப்பையன் கூறியது: ஜனவரி மாதத்தில் வழக்கமாக இதுபோன்று தொடர் மழை பெய்வது அரிது. பல ஆண்டு களுக்கு பிறகு தொடர் மழை பெய் துள்ளதால், தஞ்சாவூர் மாவட் டத்தில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களும், தோட்டக்கலை பயிர்களுக்கும் தண்ணீரில் மூழ்கி, பாதிப்படைந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கிடும் பணிகள் நடந்து வருகின்றன. வேளாண்மை, வருவாய், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு கணக்கிட்டு வருகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் இந்த கணக்கிடும் பணி நிறைவடையும். அதன்பிறகு மொத்த பாதிப்பு விவரங்கள் தெரிய வரும்.

பயிர்க் காப்பீடு நிறுவனங் களும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கணக்கெடுத்து வருகின்றன. ஆறுகளில் அதிகளவில் தண்ணீர் செல்லும் நிலையில் உடைப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். பேரிடர் நிதி என்பதை தாண்டி, அதற்கு நிகரான நிவாரணம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

SCROLL FOR NEXT