தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு குறைந்ததை தொடர்ந்து திருச்செந்தூர்- திருநெல்வேலி சாலையில் மீண்டும் போக்குவரத்து சீரானது. விளைநிலங்களில் தேங்கிய மழைநீர் வடியத் தொடங்கியதால் இயல்பு நிலை திரும்பி வருகிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை பெய்தது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அனைத்து அணைகளும் நிரம்பி உபரிநீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தாமிரபரணியில் வெள்ளம்
திருச்செந்தூர்- திருநெல்வேலி சாலையில் கருங்குளம், புளியங்குளம் பகுதியில் 2 அடிக்கு மேல் தண்ணீர் சென்றது. இதனால், இந்த வழியாக கடந்த 13-ம் தேதி மாலை முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் செய்துங்கநல்லூரில் இருந்து வசவப்பபுரம், வல்லநாடு, வாகைகுளம், முடிவைத்தானேந்தல், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி வழியாக திருப்பிவிடப்பட்டன.
இந்நிலையில் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. தாமிரபரணி ஆற்றில் நேற்று முன்தினம் காலை முதல் வெள்ளப்பெருக்கு படிப்படியாக குறையத் தொடங்கியது. நேற்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி தாமிரபரணி ஆற்றில் வைகுண்டம் அணையைத் தாண்டி செல்லும் தண்ணீரின் அளவு 33 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
போக்குவரத்து சீரானது
இதேபோல், தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் ஆத்தூர் தாமிரபரணி மேல்மட்ட பாலத்தை தாண்டி சென்ற வெள்ளம் படிப்படியாக குறைந்து. நேற்று பாலத்துக்கு கீழே சென்றது. இதனால், இந்த வழித்தடத்திலும் போக்குவரத்து முற்றிலும் சீரடைந்தது. மேலும், குடியிருப்புகள், விளைநிலங்களில் தேங்கிய ஆற்றுநீரும் படிப்படியாக வடியத் தொடங்கியுள்ளது.
புன்னக்காயல் பாதிப்பு
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோரங்களில் இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் மற்றும் வாழைப்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. தற்போது, வெள்ளம் குறைந்ததால் விளை நிலங்களில் தேங்கிய தண்ணீரும் வடியத் தொடங்கியிருக்கிறது. மழைநீர் வடிந்த போதிலும் பல இடங்களில் நெல் மற்றும் வாழைப் பயிர்கள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சேதமடைந்துள்ளன. அவற்றுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழை அளவு