தஞ்சாவூர் பெரியகோயிலில் உள்ள நந்தியம் பெருமான் சிலைக்கு மாட்டு பொங்கல் தினத்தன்று ஆயிரம் கிலோ அளவிலான காய்கறி, பழங்கள், இனிப்பு வகைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்படும்.
பின்னர், நந்தியம்பெருமானுக்கு முன்பாக 108 பசுக்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு, அவற்றுக்கு சந்தனம், குங்குமம் பூசப்பட்டு மாலை, பட்டுத் துணி போர்த்தப்பட்டு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால், நிகழாண்டு தொடர் மழை மற்றும் கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக நேற்று நடைபெற்ற மாட்டுப் பொங்கல் விழாவின்போது, நந்தியம் பெருமானுக்கு நூறு கிலோ காய்கறி, நூறு கிலோ பழங்கள், குறைந்த அளவிலான மலர்களை மட்டுமே கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஒரு பசுவை கொண்டு கோ பூஜையும், தீபாராதனையும் நடத்தப்பட்டது. பின்னர், அலங்காரம் செய்யப்பட்ட காய்கறி, பழங்கள், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.
முன்னதாக, நந்தியம் பெருமானுக்கு பால், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.