தொடர் மழை மற்றும் பண்டிகை காரணமாக வாழப்பாடி வேளாண் கூட்டுறவு விற்பனை மையத்துக்கு பருத்தி வரத்து குறைந்தது.
வாழப்பாடியில் செயல்பட்டு வரும் வேளாண் கூட்டுறவு விற்பனை மையத்தில், விவசாயிகளால் கொண்டு வரப்படும் பருத்தி மூட்டைகள் வாரந்தோறும் புதன்கிழமை ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது பருத்தி சீசன் தொடங்கிய நிலையில், பருத்தி மூட்டைகள் வரத்து வாரம்தோறும் படிப்படியாக அதிகரித்து வந்தது.
கடந்த வாரம் (6-ம் தேதி) 1,500 பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. எனவே, அடுத்தடுத்த வாரங்களில் பருத்தி வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில்,நேற்று 250 மூட்டை பருத்தி மட்டுமே விற்பனைக்கு வந்தது. டிசிஹெச் ரக பருத்தி அதிகபட்சம் ரூ.7,932-க்கும், குறைந்தபட்சம் ரூ.6,792-க்கும் விற்பனையானது. ஆர்சிஹெச் ரக பருத்தி அதிகபட்சம் ரூ.6,426-க்கும், குறைந்தபட்சம் ரூ.4,610-க்கும் விற்பனையானது. பருத்தி மூட்டைகள் மொத்தம் ரூ. 6.50 லட்சத்துக்கு விற்பனையானது. கடந்த வாரம் ரூ.30 லட்சத்துக்கு விற்பனை நடந்தது.
இதுதொடர்பாக வியாபாரிகள் கூறும்போது, “தொடர் மழை மற்றும் போகிப் பண்டிகை கொண்டாட்டம் ஆகியவற்றின் காரணமாக பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வருவது குறைந்துள்ளது” என்றனர்.