பட்டுக்கோட்டை அருகே ஏரிக் கரையை யாரோ உடைத்துச் சென்றதால், வயலுக்குள் தண்ணீர் புகுந்து நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறி விவசாயிகள், பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை வட்டம் பண்ணவயல் அருகே கூத்தாடிவயல் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. கிராம மக்களின் பங்களிப்புடன் ரூ.58 லட்சம் மதிப்பில் அண்மையில் இந்த ஏரி குடிமராமத்து செய்யப்பட்டு, கரை பலப்படுத்தப்பட்டு, தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த ஏரியின் கரையை யாரோ சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால், ஏரியிலுள்ள தண்ணீர் நெல் வயல்களுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியி ருப்பதாகக் கூறி, பட்டுக்கோட்டை- சேதுபாவாசத்திரம் சாலையில் நேற்று விவசாயிகள், பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த பட்டுக்கோட்டை டிஎஸ்பி புகழேந்தி கணேஷ், வட்டாட்சியர் தரணிகா, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் அன்பரசன், உதவிப் பொறியாளர் சுரேந்தர் மோகன் மற்றும் வருவாய்த் துறையினர் சமாதானப்படுத்தி யதால், போராட்டம் கைவிடப்பட் டது. பின்னர், இதுதொடர்பாக கிராம மக்கள் தரப்பில், போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.