Regional01

குற்றச் செயல்கள் குறித்து தகவல் தெரிவிக்க அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டத்தில் எஸ்பி சுகுணாசிங் உத்தரவின்பேரில் அனைத்து கிராமங்களுக்கும் தலா ஒரு காவலர் வீதம் கிராமக் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த காவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு தினமும் சென்று, பொதுமக்களுடன் நல்லுறவுடன் பழகி, அந்த பகுதியில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், எஸ்பி உத்தரவின்பேரில் அனைத்து கிராமங்களிலும் அந்தந்த கிராமக் காவலர்களின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஊர் பொதுமக்களிடம், கிராமத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் பற்றியும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர், சட்டவிரோத மது விற்பனை, மணல் திருட்டு, சந்தேக நபர் நடமாட்டம் போன்றவை குறித்தும் தகவல் தெரிவிக்கலாம் என்று கேட்டுக்கொண்டனர். தகவல் தெரிவிப்பவர்கள் குறித்து ரகசியம் காக்கப்படும் எனவும் கூறினர்.

மேலும், பொங்கல் பண்டிகையையொட்டி மாவட்டம் முழுவதும் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த கொடி அணிவகுப்பில் தென்காசி மாவட்டத்தில் உள்ள 4 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 15 காவல் ஆய்வாளர்கள், 43 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 398 காவலர்கள் உட்பட மொத்தம் 460 பேர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT