தமிழகத்தில் பொங்கலையொட்டி மகளிர் சுயஉதவி குழுக்களில் உள்ள 1.07 கோடி மகளிருக்கு முதல்வர் கையெழுத்திட்ட வாழ்த்து மடல் வழங்கப்படுகிறது. திருநெல்வேலியில் வாழ்த்து மடலை மாவட்ட வாக்காளர் பட்டியல் தேர்தல் பார்வையாளர்
பி.ஜோதி நிர்மலாசாமி மகளிருக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் ஒவ்வொரு ஆண்டும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்தினை வாழ்த்து மடல் மூலம் தெரிவித்து வருகிறார். அதன்படி நடப்பு ஆண்டு தமிழகத்திலுள்ள 7.22 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்களில் உறுப்பினர்களாக உள்ள 1.07 கோடி மகளிருக்கும் தமிழக முதல்வர் கையொப்பமிடப்பட்ட வாழ்த்து மடல் வழங்கப்பட்டு வருகிறது. சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு சீரிய திட்டங்களை பயன்படுத்தி, தங்கள் பொருளாதார நிலையினை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், திருநெல்வேலி சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி, மகளிர் திட்ட நல அலுவலர் மைக்கேல் அந்தோனி பெர்னான்டோ உடனிருந்தனர்.