பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூரில் கனமழையையும் பொருட்படுத்தாமல் பாதயாத்திரை பக்தர்கள் குவிந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைஇன்று (ஜன. 14) கொண்டாடப்படவுள்ள நிலையில் வழக்கம் போல் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த போதிலும், பாதயாத்திரை பக்தர்கள் மழையை பொருட்படுத்தாமல் தொடர்ந்து திருச்செந்தூர் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் அலகு குத்தியும், காவடி மற்றும் பால்குடம் எடுத்தும் வருகின்றனர். நேற்றும் ஏராளமானபக்தர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வந்தனர். இதனால், கோயில் வளாகத்தில்பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
திருச்செந்தூர் கோயிலில் தைப்பொங்கலை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.