தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் நெல் வயலுக்குள் புகுந்த வெள்ளம் 
Regional04

தாமிரபரணி ஆற்றில் வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது வைகுண்டம், ஆழ்வார்திருநகரியில் கரையோர மக்கள் அகற்றம்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றின் இரு கரையோர பகுதிகளிலும் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கின.

தூத்துக்குடி மாவட்டம் மருதூர் அணைக்கட்டை தாண்டி நேற்று பிற்பகலில் 65 ஆயிரம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியது. இதுவே வைகுண்டம் அணையை தாண்டி 62 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றது. இதனால்ம் கொங்கராயக்குறிச்சி பகுதியில் தாழ்வான பகுதியில் வசித்த 10 குடும்பங்கள், ஆழ்வார்திருநகரியில் 35 குடும்பங்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முறப்பநாடு, வல்லநாடு, முத்தாலங்குறிச்சி, ஆழ்வார் திருநகரி, கருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தாமிரபரணி ஆற்றின் இரு கரையோரங்களிலும் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் நெல் மற்றும் வாழைப்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மேலும், கரையோர பகுதிகளில் உள்ள சில சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றும் பலத்த காற்றும், மழையுமாக நீடித்தது.

தூத்துக்குடி நகரின் பல பகுதிகள் மீண்டும் வெள்ளக்காடாக மாறியது. தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் தடைப் பட்டுள்ளன. பொங்கல் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): திருச்செந்தூர் 17, காயல்பட்டினம் 12, குலசேகரன்பட்டினம் 16, விளாத்திகுளம் 19, காடல்குடி 12, வைப்பார் 26, சூரன்குடி 28, கோவில்பட்டி 12, கழுகுமலை 2.5, கயத்தாறு 20, கடம்பூர் 31, ஓட்டப்பிடாரம் 3, மணியாச்சி 19, வேடநத்தம் 30, கீழஅரசடி 13, எட்டயபுரம் 14, சாத்தான்குளம் 52.2, வைகுண்டம் 28.3, தூத்துக்குடி 8 மிமீ மழை பதிவாகியுள்ளது.

SCROLL FOR NEXT