பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சேலம் வஉசி மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து அதிகரித்திருந்து இருந்தது. இருப்பினும் பூக்கள் விற்பனை சரிந்திருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக சேலம் வஉசி மார்க்கெட் வியாபாரி சக்கரவர்த்தி கூறியதாவது:
வழக்கமாக 13 டன் பூ வரத்து இருக்கும். பொங்கல் விற்பனையை எதிர்பார்த்து, 30 டன் சாமந்தி பூ விற்பனைக்கு வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர். வெளியூர்களில் இருந்து சிறு வியாபாரிகள் வராததால் சுமார் 10 டன் பூக்கள் விற்பனையாகவில்லை.
பண்டிகை நாளில் சாமந்தி பூ கிலோ ரூ.200-க்கு விற்பனையாகும். தற்போது ரூ.120 வரை மட்டுமே விலைபோகிறது. பனி, தொடர் மழை காரணமாக, மல்லிகை விளைச்சல் குறைந்தது, இதனால், சன்னமல்லி கிலோ ரூ.2,400-க்கும், குண்டுமல்லி ரூ.2,200 வரை விற்பனையானது. மற்ற பூக்களில் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, மாவட்டத்தின் மிகப்பெரிய தினசரி காய்கறி மார்க்கெட்டான தலைவாசல் மார்க்கெட்டுக்கு பொங்கலை முன்னிட்டு நூற்றுக்கணக்கில் வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இருப்பினும் வாழைத்தார் விற்பனையும் மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக வியாபாரிகள் கூறும்போது, “நாமக்கல் மாவட்டம் மோகனூர், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து வாழைத்தார்களைக் கொண்டு வந்துள்ளோம். தார்கள் விலை ரூ.250 முதல் ரூ.350 வரை உள்ளன. சிறு வியாபாரிகள் வரவு குறைவாக இருப்பதால் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது” என்றனர்.