திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லுார் மஜீதியா தெருவைச் சேர்ந்தவர் அப்துல்கனி(36), இவருக்கு திருமணமாகி, சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை விவாகரத்து செய்துவிட்டார்.
மலேசியாவில் பணிபுரிந்து வந்த அப்துல்கனி, கரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்கு திரும்பி வந்து விட்டார்.
இந்நிலையில் அவருக்கும் அவரது உறவினரான ஒரு பெண்ணுக்கும் கூடா நட்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த அதே தெருவில் வசிக்கும் அந்தப் பெண்ணின் உறவினரான அஷ்ரப்அலி(40) பலமுறை அப்துல் கனியை கண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக, கடந்த டிச.27-ம் தேதி அஷ்ரப் அலி, அப்துல் கனி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஊரை விட்டு அப்துல் கனி வெளியேறி, பல இடங்களில் சுற்றி திரிந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி அளவில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் அப்துல் கனி நின்று கொண்டிருந்தபோது, அங்கு காரில் வந்த அஷ்ரப் அலி அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த அப்துல் கனி அந்த இடத்திலேயே இறந்தார். பின்னர், அங்கிருந்து தப்பியோடிய அஷ்ரப் அலியை, பொதுமக்கள் விரட்டிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
மருத்துவக் கல்லுாரி போலீஸார் அஷ்ரப் அலியை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.