தொடர் மழை காரணமாக சகதிக்காடாக மாறியுள்ள தூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையம். படம்: என்.ராஜேஷ் 
Regional02

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து மிதமான மழை

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றும் பரவலாக மழை பெய்தது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்கள் அவதியடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அவ்வப்போது கனமழை பெய்து வரும் நிலையில், தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக தூத்துக்குடி நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக தபால் தந்தி காலனியில் பல தெருக்களில் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கி நிற்பதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் லூர்தம்மாள்புரம், பிரையண்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தெருக்களில் மழைநீர் தேங்கியிருப்பதால் மாநகராட்சி அதிகாரிகள் ராட்சத மோட்டார்கள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணியில் மீண்டும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையம் தொடர் மழை காரணமாக சகதிக்காடாக மாறியுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். இதேபோல் மார்க்கெட் பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நிற்பதால் பொங்கல் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் அணைகளில் இருந்து உபரநீர் வெளியேற்றம் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றின் கடைசி அணையான வைகுண்டம் அணையை தாண்டி நேற்று 7,500 கன அடி தண்ணீர் கடலுக்கு சென்று கொண்டிருந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): திருச்செந்தூர் 17, காயல்பட்டினம் 5, குலசேகரன்பட்டினம் 9, விளாத்திகுளம் 15, காடல்குடி 14, வைப்பார் 11, சூரன்குடி 33, கோவில்பட்டி 1, கயத்தாறு 2, கடம்பூர் 4, ஓட்டப்பிடாரம் 11, மணியாச்சி 2, வேடநத்தம் 10, கீழஅரசடி 11, எட்டயபுரம் 1, சாத்தான்குளம் 14.6, வைகுண்டம் 24, தூத்துக்குடி 5 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

குமரி மாவட்டத்தில் கனமழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில், நேற்றுமுன்தினம் மாலையில் இருந்து கனமழை பெய்தது. விடிய விடிய பெய்த மழை, நேற்று பகலிலும் நீடித்தது. இதனால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், குளச்சல், தக்கலை, குலசேகரம் என, மாவட்டம் முழுவதும் நேற்று மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மீன்பிடி தொழில், ரப்பர் பால் வெட்டுதல், செங்கல் சூளை, தென்னை சார்ந்த தொழில், மலர் வர்த்தகம், கட்டிட தொழில் என அனைத்து தரப்பு தொழில்களும் முடங்கின.

அதிகபட்சமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்பிடிப்பு பகுதியான பாலமோரில் 26 மிமீ மழை பதிவானது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அணைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 2,700 கனஅடியும், பெருஞ்சாணி அணைக்கு 2,300 கனஅடி தண்ணீரும் வந்தது. பேச்சிப்பாறை அணையில் 43.20 அடியும், பெருஞ்சாணி அணையில் 66 அடியும் தண்ணீர் இருந்தது.

SCROLL FOR NEXT