திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு சரியான தகவல்களுடன் சுற்றுலாத் துறையால் வைக்கப்பட்டுள்ள புதிய பதாகை. படம்: இரா.கார்த்திகேயன் 
Regional02

தவறான தகவல்களை திருத்தி புதிய பதாகை வைத்த சுற்றுலாத் துறை

செய்திப்பிரிவு

திருப்பூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தவறான தகவல்களு டன் கூடிய பதாகையை, பொது மக்கள் பார்வைக்கு மாவட்ட சுற்று லாத் துறை வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதில், மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்கள் மற்றும் பிரதான கோயில்களை உள்ளடக்கிய பகுதிகளை குறிப்பிட்டிருந்ததுடன், பல சுற்றுலாத் தலங்களின் தொலைவு குறித்த தகவல் தவறுதலாக இருந்தது. இதுதொடர்பாக, கடந்த 7-ம் தேதி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வெளியானது.

இதையடுத்து, அந்த தகவல் பதாகையை சுற்றுலாத் துறை அகற்றிவிட்டு, சரியான தகவல்களுடனான பதாகையை தயார் செய்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்தது.

அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் 11 கி.மீ. என்பதை 18 கி.மீ. எனவும், அவிநாசிக்கு முன்பாக உள்ள திருமுருகன்பூண்டி கோயிலை 12 கி.மீ. எனவும் சரியாக திருத்தப்பட்டுள்ளது. அதேபோல, காங்கயம் 29 கி.மீ., சிவன்மலை 27 கி.மீ., பஞ்சலிங்க அருவி 81 கி.மீ., திருமூர்த்தி அணை 79 கி.மீ., அமணலிங்கேஸ்வரர் கோயில் 81 கி.மீ. எனவும் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, "மாவட்ட சுற்றுலாத் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பதாகையில் பல்வேறு தகவல்கள் தவறுதலாக இடம்பெற்றிருந்தன. தற்போது, பல்வேறு பகுதிகளிலுள்ள சுற்றுலாத்தலங்களின் தொலைவு சரியாக குறிப்பிடப்பட்டுள்ளது" என்றனர்.

மாவட்ட உதவி சுற்றுலா அலுவலர் செல்வராஜ் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, "சுற்றுலாத் துறை சார்பில் சமீபத்தில்தான் பதாகை வைக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சுற்றுலா பகுதிகளின் தூரம் தவறுதலாக இருப்பதை சுட்டிக் காட்டியிருந்தீர்கள். தற்போது, அவற்றை திருத்தி புதிய பதாகையை வைத்துள்ளோம்" என்றார்.

SCROLL FOR NEXT