Regional02

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 819 பேருக்கு பணி நியமன ஆணைகள்

செய்திப்பிரிவு

திருநின்றவூரில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலை மற்றும் பயிற்சித் துறை சார்பில் நேற்று நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களில் 819 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலை மற்றும் பயிற்சித் துறை சார்பில் நேற்று திருநின்றவூர் ஜெயா கலை அறிவியல் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. காலை முதல், மாலை வரை நடந்த இந்த முகாமில், ரெனால்ட் நிசான், எம்.ஆர்.எப் வீல்ஸ் இந்தியா, மகேந்திரா, ராம் உள்ளிட்ட 153-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தகுதியானவர்களை தேர்வு செய்தது.

இம்முகாமில் ஆவடி, பட்டாபிராம், பூந்தமல்லி, திருவள்ளூர் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 7,425 இளைஞர்கள், இளம்பெண்கள் பங்கேற்றனர். இதில், 1,065 பேர் தேர்வு செய்யப்பட்டு 819 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 256 பேர் 2-ம் கட்ட நேர்முகத் தேர்வுக்கு தேர்வாகியுள்ளனர்.

பணி நியமன ஆணைகள் பெற்றவர்களில், 3 பார்வை மாற்றுத் திறனாளிகள் உட்பட 77 மாற்றுத் திறனாளிகள் அடங்குவர். தனியார் நிறுவனங்களின் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் வீரராகவ ராவ், ஆட்சியர் பொன்னையா ஆகியோர் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

இம்முகாமில், மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) மீனாட்சி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் (பொறுப்பு) கவிதா, அம்பத்தூர் எம்எல்ஏ., அலெக்சாண்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT