Regional01

கரோனா தடுப்பூசி பணிகளை சேலம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

செய்திப்பிரிவு

முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை சேலம் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

கரோனா வைரஸ் பரவலை தடுக்க முதல்கட்டமாக கரோனா பரவல் தடுப்புப் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போட அரசு ஏற்பாடுகள் மேற்கொண்டு வருகிறது. இதற்காக சேலம் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்த ஒத்திகை நடத்தப்பட்டது.

கரோனா தடுப்பூசிகள் வந்தவுடன் அவற்றை பாதுகாப்பாக இருப்பு வைத்து பயன்படுத்த சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு 80 குளிர்பதனப் பெட்டிகள் ஏற்கெனவே வந்துள்ளன.

தற்போது, தடுப்பூசிகளை செலுத்த தேவையான சிரிஞ்சுகள் சேலம் மண்டலத்துக்கு 3 லட்சம் வந்துள்ளது. இவை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து, அந்தந்த மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டடன.

இதனிடையே, முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை சேலம் ஆட்சியர் ராமன் நேற்று ஆய்வு செய்தார். இப்பணிகள் தொடர்பாக மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செல்வகுமார் கூறும்போது, “அரசிடம் இருந்து தடுப்பூசிகள் வந்தவுடன் அரசின் வழிகாட்டுதல்படி உடனடியாக தடுப்பூசிகளை செலுத்தும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன” என்றார்.

SCROLL FOR NEXT