Regional01

வியாபாரி கொலை வழக்கில் 3 பேர் கைது

செய்திப்பிரிவு

சேலத்தில் பழைய பேப்பர் வியாபாரி கொலை வழக்கில் 3 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் செவ்வாய்ப்பேட்டை அப்பாசாமி தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (60). இவரது மனைவி நளினா (50). இவர்களது மகள் ஐஸ்வர்யா திருமணமாகி சென்னையில் கணவருடன் வசித்து வருகிறார். சீனிவாசன் பழைய பேப்பர் கடை நடத்தி வந்தார். இவர் மதியம் சாப்பிட வீட்டுக்கு செல்லும் போது, கடையை மனைவி நளினா பார்த்து வந்துள்ளார்.

கடந்த 8-ம் தேதி மதியம் சீனிவாசன் வீட்டுக்கு சாப்பிடச் சென்றார். நீண்ட நேரமாகியும் கடைக்கு திரும்பாததால், நளினா வீட்டுக்கு சென்றார். அப்போது, வீட்டில் தலையில் அடிபட்டு சீனிவாசன் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வீட்டில் தவறி விழுந்து அவர் இறந்து விட்டதாக கருதி உறவினர்கள் அவரது சடலத்தை எடுத்து சென்று எரித்துவிட்டனர். கடந்த 9-ம் தேதி சென்னையில் இருந்து ஐஸ்வர்யா வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த 55 பவுன் நகை மற்றும் வைர நகை காணாமல் போனது தெரிந்தது.

இதுதொடர்பாக செவ்வாய்ப் பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். மாநகர காவல் துணை ஆணையர் செந்தில் தலைமையில் காவல் உதவி ஆணையர் யாஸ்மின், இன்ஸ்பெக்டர் சுந்தரம் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

சீனிவாசன் கடையில் பணிபுரியும் அன்னதானப்பட்டி மணியனூரைச் சேர்ந்த தமிழ்செல்வனிடம் (25) சந்தேகத்தின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில்,தமிழ்செல்வன அவரது கூ்டடாளிகள் கார்த்திக் கண்ணன் (26) மற்றும் 17 வயது சிறுவனுடன் சேர்ந்த சீனிவாசனை அடித்துக் கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து, தமிழ்செல்வன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்த 55 பவுன் நகை மற்றும் வைர நகைகளை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT