Regional02

வணிக வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம்? உதகை அக்ரஹாரத்தில் முட்புதர்கள் அகற்றம்

செய்திப்பிரிவு

உதகை கமர்சியல் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக வெளியான தகவலையடுத்து அப்பகுதியில் இருந்த புதர்களை மக்கள் அகற்றினர்.

நீலகிரி மாவட்டம் உதகை கமர்சியல் சாலையில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் வங்கி, ஏடிஎம் மையம், கிளீனிக் மற்றும் பல்வேறு கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் வணிக வளாகத்தின் வெளிப்புறக் கதவை திறந்தபோது, தரை முழுவதும் ரத்தக் கறை பரவியிருந்தது. கிளீனிக்குக்கு காயத்தோடு யாராவது வந்து சென்றிருக்கலாம் எனக் கூறப்பட்டது.

இதையடுத்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்தபோது, நள்ளிரவில் வணிக வளாகத்துக்குள் இருந்து அடையாளம் தெரியாத விலங்கு வெளியேறியது தெரியவந்தது. இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த வனத் துறையினர், சிறுத்தை குட்டிபோல இல்லாமல், காட்டுப் பூனையாகவோ அல்லது பூனைச் சிறுத்தையாகவோ இருக்கலாம் என தெரிவித்தனர். இதற்கிடையே, தனியார் வணிக வளாகத்துக்குள் சிறுத்தை புகுந்துவிட்டதாக உதகை நகரம் முழுவதும் தகவல் பரவியது. இதையடுத்து அப்பகுதியில் இருந்த புதர்களை அப்பகுதி மக்கள் வனத் துறையினர் உதவியுடன் நேற்று அகற்றி தூய்மைப்படுத்தினர்.

SCROLL FOR NEXT