பயணிகள் வருகை குறைந்ததால், வெறிச்சோடி காணப்படும் ஏற்காடு படகு இல்லம். 
Regional01

தொடர் மழை அச்சுறுத்தலால் பயணிகள் இன்றி வெறிச்சோடிய ஏற்காடு

செய்திப்பிரிவு

பொங்கல் முன்னேற்பாடு பணி மற்றும் தொடர் மழை அச்சுறுத்தல் காரணமாக ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கடந்து இரு தினங்களாக பயணிகள் வருகை 50 சதவீதம் குறைந்தது.

தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களில் பார்வையாளர்கள் கூட்டம் கடந்த சில வாரங்களாக அதிகரித்து இருந்தது. குறிப்பாக கடந்த வாரங்களில் ஏற்காடு, ஆனைவாரி முட்டல் அருவி உள்ளிட்ட இடங்களில் பயணிகள் வருகையால் பரபரப்பாக இருந்தது.

இந்நிலையில், கடந்த இரு நாட்கள் விடுமுறை என்றபோதிலும் ஏற்காடு உள்ளிட்ட இடங்களில் பயணிகள் வருகை குறைவாக இருந்தது. இதனால், ஏற்காட்டின் முக்கிய பகுதிகளான ஏற்காடு ஏரி, அண்ணா பூங்கா, ஏரி பூங்கா உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

இதுதொடர்பாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்துக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பொதுமக்கள் பண்டிகை முன்னேற்பாடு பணிகளில் ஆர்வம் காட்டி வருவதால் சுற்றுலா பகுதிகளில் பயணிகள் வருகை குறைந்துள்ளது.

மேலும், கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக திடீர் கனமழை, தொடர் மழை என இயற்கை மாற்றமும் காணப்படுகிறது. இதனால், காய்ச்சல், ஜலதோஷம் உள்ளிட்ட உடல் நலக்குறைபாடுகளும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அதிகரித்து வருகிறது. எனவே, மக்கள் சுற்றுலா வருவதைத் தவிர்த்துள்ளனர். இதன் காரணமாக, பயணிகள் வருகை 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

முட்டல் அருவி

இதேபோல, ஆனைவாரி முட்டல் அருவி மற்றும் முட்டல் ஏரி படகு குழாம் ஆகிய இடங்களிலும் பயணிகள் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது. சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிலும், பார்வை யாளர்கள் கூட்டம் குறைந்திருந்தது.

SCROLL FOR NEXT