டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கி ரூ.2 லட்சம் வழிப்பறி செய்த 2 பேரை வரப்பாளையம் போலீஸார் தேடி வரு கின்றனர்.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள வரப்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் விற்பனையாளராக ஆறுமுகம் (42) உள்ளார். இவர் கடையில் தினமும் வசூலாகும் பணத்தை இரவில் வீட்டுக்கு எடுத்துச் சென்று மறுநாள் வங்கியில் செலுத்துவது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு பணி முடிந்ததும் கடையை பூட்டி விட்டு வசூல் தொகை ரூ.2 லட்சத்தை எடுத்துக் கொண்டு தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
பழனி கவுண்டன்புதூர் பகுதியில் சென்றபோது மற்றொரு வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் வழிமறித்து ஆறு முகம் மற்றும் அவரது நண்பரை தாக்கி ரூ.2 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பினர்.
இதுதொடர்பாக வரப்பாளையம் காவல் நிலையத் தில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். தாக்குதலில் காயமடைந்த ஆறுமுகம் மற்றும் அவரது நண்பர் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.