Regional01

வங்கா நரி பிடிப்பவர்களுக்கு சிறை தண்டனை வனத்துறை எச்சரிக்கை

செய்திப்பிரிவு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்த வனப்பகுதியில் வங்கா நரியைப் பிடித்தால் சிறை தண்டனை வழங்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது பாரம்பரிய வழக்கம். இதேபோல, வாழப்பாடி வட்டாரத்தில் உள்ள சில கிராமங்களில் வங்கா நரி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்தது. அரிய வன விலங்குகள் பட்டியலில் உள்ள வங்கா நரியை பிடிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

தற்போது பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வங்கா நரி பிடிப்பதில் மக்கள் ஈடுபடுவதைத் தடுக்க சேலத்தில் மண்டல வனப்பாதுகாவலர் பெரியசாமி தலைமையில் மாவட்ட வன அலுவலர் முருகன் முன்னிலையில் வனச்சரகர்கள் பங்கேற்ற சிறப்புக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் உதவி வனப்பாதுகாவலர் முருகன், வாழப்பாடி வனச்சரகர் துரை முருகன் மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக வாழப்பாடி வனச்சரகர் துரை முருகன் கூறும்போது, “வாழப்பாடி சுற்று வட்டார கிராமங்களான ரங்கனூர், கொட்டவாடி, சி.என்.பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் பொங்கல் முடிவுற்று கரிநாள் அன்று வனத்துக்குள் சென்று வங்கா நரியைப் பிடித்து அதற்கு சடங்குகள் செய்து கோயிலைச் சுற்றி வலம் வரச் செய்வது வழக்கமாக உள்ளது. அழிந்து வரும் அரிய வன விலங்குகள் பட்டியலில் வங்கா நரி இடம்பெற்றுள்ளது. எனவே, வங்கா நரியைப் பிடிப்பவர்கள் மீது வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972-ன் படி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதிகபட்சம் 7 ஆண்டு சிறை தண்டனை நீதிமன்றம் மூலம் வழங்கப்படும். இதுதொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கிராமங்களில் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT