Regional02

நிகழாண்டு ஜனவரியில் சராசரியைவிட அதிக மழை தஞ்சாவூர் ஆட்சியர் தகவல்

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மாங்குடி, பவுண்டரீகபுரம், முத்தூர் ஆகிய கிராமங்களில் பருவமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை நேற்று பார்வையிட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

புரெவி புயல் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 8,550 ஹெக்டேர் நெற்பயிர்கள் பாதிப்பு என அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜனவரியில் சராசரியாக 10 மி.மீ மழைப்பொழிவு இருக்கும். ஆனால், நிகழாண்டு ஜனவரியில் இதுவரை சராசரியாக 100 மி.மீ.க்கு மேல் மழை பெய்துள்ளது. ஒருசில வட்டாரங்களில் 150-160 மி.மீ மழை பெய்துள்ளது.

திருப்பனந்தாள், திருவிடைமருதூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி போன்ற வட்டாரங்களில் அதிக அளவில் பெய்த மழையால், பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தற்போது ஆய்வு செய்ததில், நெல்மணிகளில் 33 சதவீதத்துக்கும் மேலாக பாதிப்பு உள்ளதாக தெரிகிறது. அதனடிப்படையில், வேளாண், வருவாய்த் துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து, கள ஆய்வு மேற்கொண்டு, கணக்கீடு செய்து, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளேன் என்றார்.

பின்னர், கும்பகோணம் துக்காம்பாளையத் தெருவில் ஏற்பட்ட கழிவுநீர் அடைப்பு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்ட ஆட்சியர் கூறியது: கும்பகோணத்தில் புதைசாக்கடை திட்டம் மற்றும் குடிநீர் பகிர்மான குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் முடிவடையும் தருவாயில் உள்ளன. இந்தப் பணிகள் முடிந்தவுடன் ரூ.25.25 கோடி மதிப்பீட்டில், 46 கி.மீ நீளத்துக்கு 94 புதிய சாலைகள் அமைக்கப்பட உள்ளன. தற்போது சேதமடைந்த நிலையில் உள்ள சாலைகள் விரைவில் புதிய சாலைகளாக மாற்றப்பட உள்ளன என்றார்.

SCROLL FOR NEXT