இந்து மதத்துக்கு எதிராக பேசுபவர் களை புறக்கணிக்க வலியுறுத்தி வீடு, வீடாக சென்று துண்டுப் பிரசுரம் வழங்கி பிரச்சாரம் செய்யப் படும் என இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்தார்.
வேலூர் கோட்ட இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலாளர் அருண்குமார் தலைமை வகித்தார். மாநில செயலாளர் மனோகர், கோட்டத் தலைவர் மகேஷ், கோட்ட அமைப்பாளர் ராஜேஷ், கோட்டச் செயலாளர்கள் ரவி, ரகுநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் கவுதம் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் சிறப்புரையாற்றினார். வேலூர், ராணிப் பேட்டை, திருப்பத்தூர், திருவண் ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் கூறும்போது, “இந்து மதத்தை இழிவுபடுத்தி அரசியல் கட்சிகளில் உள்ள சிலர் பேசி வருகின்றனர். அரசியல் கட்சிக்கும் மதத்துக்கும் சம்பந்தம் இருக்கக்கூடாது. அரசியல் கட்சிகள் அரசியல் மட்டுமே செய்ய வேண்டும். மதத்துக்கு வரக்கூடாது. மத நம்பிக்கை இல்லாத கட்சிகள் மதத்தில் தலையிடுவது தவறு. முருகரையும் விநாயகரையும் பற்றி பேசுபவர்கள், மற்ற மத கடவுள்களை பேச தயாராக இல்லை.
இந்து மதத்தை சீரழிக்க சதித் திட்டத்துடன் செயல்படுகின்றனர். இந்து மத நம்பிக்கையில் குழப் பத்தை ஏற்படுத்த, வெளிநாட்டு தொடர்புடன் ஈடுபட்டு வருகின்றனர். கடவுள் முருகரை பற்றி விமர்சனம் செய்ய திருமாவளவனுக்கு தகுதி இல்லை. மற்ற மதத்தினரை திருப்திப்படுத்தவே பேசுகிறார். இதுபோன்றவர்களின் செயல்களை இந்து மதத்தில் உள்ளவர்களுக்கு புரிய வைப்பதுதான் எங்களது பணியாகும்.
இந்து முன்னணி என்பது கட்சி சார்பற்ற அமைப்பு. இந்து மதத்தை இழிவுப்படுத்தி பேசுபவர்களை புறக்கணித்து, அவர்களுக்கு வாக் களிக்க வேண்டாம் என வீடு, வீடாக சென்று துண்டுப்பிரசுரம் வழங்கி பிரச்சாரம் செய்ய உள்ளோம். கரோனாவை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பிரசாதம் வழங்கும் பணியை திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் மீண்டும் தொடங்க வேண்டும். கோயில் யானை ருக்கு உயிரிழந்து பல ஆண்டுகள் கடந்தும், புதிதாக யானை வாங்கவில்லை. உடனடி யாக யானை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.