திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம், சங்க உறுப்பினர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், "கரோனா பாதிப்பில் இருந்து மீள்வதற்கான முயற்சிகளில் திருப்பூர் தொழில் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
மூலப்பொருட்களின் விலை உயர்வால் மீண்டும் ஒரு கடினமான சூழ்நிலைக்கு தொழில்துறையினர் தள்ளப்பட்டுள்ளனர். பஞ்சு விலை உயர்வால் அனைத்து வகை நூல்கள் விலையும் உயர்ந்துவிட்டன. மேலும், ஜாப் ஒர்க் கட்டணங்களும் உயர்ந்து வருகின்றன.
15 முதல் 20 சதவீதம் வரை மூலப் பொருட்களின் விலை, ஜாப் ஒர்க் கட்டணம் உயர்ந்துள்ளதால், ஆடை உற்பத்தி செலவி னங்கள் அதிகரித்துள்ளன. இதனால், ஆயத்த ஆடைகளின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.
தற்போதைய சூழ்நிலையை உணர்ந்து, சர்வதேச ஆயத்த ஆடை வர்த்தகர்கள், பின்னலாடைகளின் விலையை அதிகரித்து வழங்க வேண்டும்.
நிறுவனங்கள் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு கைகொடுக்க வேண்டும். இந்த கடிதத்தை உறுப்பினர்கள் தங்களது வர்த்தகர்களுக்கு அனுப்ப வேண்டும். மூலப்பொருட்களின் விலை உயர்வுக்கேற்ப ஆடைகளின் விலையை தொழில்துறையினர் உயர்த்தி பெற வேண்டும்" என்று குறிப் பிட்டுள்ளார்.