Regional01

கொங்கணாபுரம் சந்தையில் ரூ.8 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

செய்திப்பிரிவு

எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் சந்தையில் ரூ.8 கோடிக்கு கால்நடைகள் வி்ற்பனையானது.

எடப்பாடி அடுத்த கொங்கணாபுரத்தில் வாரம் தோறும் சனிக்கிழமை கால்நடை சந்தை கூடி வருகிறது. நேற்று நடந்த சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து கால்நடை வளர்ப்பவர்கள் ஆடு, கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். சந்தையில் 9,000 ஆடுகள், 1,500 பந்தய சேவல்கள், 2,500 சேவல் மற்றும் கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. மேலும், 100 டன் காய்கறிகளும் விற்பனைக்கு வந்திருந்தது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சந்தையில் வழக்கத்தை விட அதிகளவு கால்நடைகள் விற்பனையானது. மேலும், மாடுகளுக்கு தேவையான அலங்காரப் பொருட்களின் விற்பனையும் அதிகரித்தது.

சந்தையில் 10 கிலோ ஆடுகள் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையும், 20 கிலோ ஆடுகள் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரையும், குட்டி ஆடுகள் ரூ.1,600 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனையானது. பந்தயச் சேவல்கள் குறைந்தபட்சம் ரூ.ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ. 7 ஆயிரம் வரையும், வளர்ப்பு கோழிகள் ரூ.100 முதல் ரூ.ஆயிரம் வரை விற்பனையானது.

இதுதொடர்பாக கால்நடை வியாபாரிகள் கூறும்போது, “பொங்கல் பண்டிகையுடன் வரும் கருநாள் கொண்டாட்டத்துக்காக பொதுமக்கள் ஆடு, கோழிகளை அதிக அளவில் வாங்கிச் சென்றனர். சந்தையில் ரூ.8 கோடி வரை வர்த்தகம் நடந்தது” என்றனர்.

SCROLL FOR NEXT