பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
வெளியூர்களில் தங்கி பணிபுரியும் பலரும் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.
இதேபோல சேலம் மாவட்டத்தில் இருந்து சென்னை, கோவை, மதுரை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், ஆம்னி பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்க வாய்ப்பு உள்ளன. இதை தடுக்கும் விதமாக வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் சுங்கச்சாவடிகள், பேருந்து நிலையம், முக்கிய சந்திப்புகளில் நின்று ஆம்னி பேருந்துகளில் ஆய்வு செய்வர். வரும் 12-ம் தேதி முதல் வரும் 18-ம் தேதி வரை ஆய்வு நடைபெறும்.
ஆய்வின்போது, கூடுதல் கட்டணம் மற்றும் வரி செலுத் தாமை உள்ளிட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் பேருந்து உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கூடுதல் கட்டணம் தொடர்பாக பொதுமக்களும் தங்களது எல்லைக்கு உட்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம் என வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.