Regional02

சபரிமலை பிரசாதம் தபாலில் பெற ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

செய்திப்பிரிவு

சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதத்தை அஞ்சல் வழியில் பெறுவதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது.

இதுகுறித்து, தருமபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஹரி, கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதத்தை அஞ்சல் வழியில் பெறுவதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. கோயிலின் மண்டல மகர விளக்கு சீசன் தொடங்கியுள்ளதை ஒட்டி திருவிதாங்கூர் தேவஸ்தானமும், இந்திய அஞ்சல் துறையும் இணைந்து பக்தர்களுக்கு பிரசாதத்தை அஞ்சல் வழி யில் அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

தருமபுரி அஞ்சல் கோட்டத்தில் தருமபுரி தலைமை அஞ்சலகம் மற்றும் மாவட்டத்தில் உள்ள 30 துணை அஞ்சலகங்களிலும் இதற்கான முன்பதிவு நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி கோட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி தலைமை அஞ்சலகம், ஓசூர் துணை அஞ்சலகம் மற்றும் 38 துணை அஞ்சலகங்களில் முன்பதிவு நடைபெறுகிறது.

அரவணை பாயசம், நெய், குங்குமம், மஞ்சள், விபூதி மற்றும் அர்ச்சனை பிரசாதம் ஆகியவை அடங்கிய பார்சலின் விலை ரூ.450. ஒரு நபர் ஒரு விண்ணப்பத்தில் அதிகபட்சமாக 10 பிரசாத பார்சல்கள் பெற முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்த பக்தர்களின் வீடுகளுக்கு விரைவு அஞ்சல் மூலம் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

கரோனா தொற்று சூழல் நீடிக்கும் நிலையில், வீட்டில் இருந்தபடியே ஐயப்பன் அருள் பெற விரும்பும் பொதுமக்கள் அருகிலுள்ள அஞ்சலகங்களை அணுகி பிரசாதம் பெற முன்பதிவு செய்து பயன்பெறலாம். கூடுதல் விவரங்கள் அறிய விரும்புவோர் 88836 68199 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

SCROLL FOR NEXT