‘சிறந்த தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது,’ என ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளதாவது:
தோட்டக்கலைப்பயிர்களை சிறந்த முறையில் தொழில்நுட்ப யுக்திகளைக் கையாண்டு சாகுபடி செய்து வரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் தலா பத்து சாதனையாளர் விருதுகளை விவசாயிகளுக்கு அரசு வழங்கி வருகிறது.
பாரம்பரிய, வீரிய ரகங்கள், ஒட்டு ரகங்கள், நவீன தொழில் நுட்பங்கள், சிறப்பான பயிர் பராமரிப்பு, நீர் மேலாண்மை, ஒருங்கிணைந்த உரம் மற்றும் பூச்சி நோய் மேலாண்மை , ஒருங்கிணைந்த பண்ணையம், மழைநீர் சேகரிப்பு , அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள், சிறப்பான சந்தை மேலாண்மை தலைப்புகளில் விருதுகள் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் வசிக்கும் சொந்தமாக நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் இதில் போட்டியிடலாம்.
ஒரு விவசாயி வட்டார அளவில் ஒரு விருதிற்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம். வட்டார அளவில் விருது பெற்ற விவசாயிகளிலிருந்து மாவட்ட விருதுக்கும் மற்றும் மாவட்ட அளவில் விருது பெற்ற விவசாயிகளிலிருந்து மாநில விருதுக்கும் விவசாயிகளை குழு தேர்வு செய்யும்.
இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் இத்துறையின் இணையதளம் WWW.tnhorticulture.tn.gov.in உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக் கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தோட்டக் கலை விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.