Regional02

அரசு அலுவலகங்களில் பிப்.9-ல் குடியேறும் போராட்டம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் முடிவு

செய்திப்பிரிவு

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கக் கூட்டம் திருவாரூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மாநிலப் பொதுச் செயலாளர் நம்பிராஜன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சந்திரா, மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கணேசன், மாவட்டச் செயலாளர் கரக்கோரியா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், கரோனா காரணமாக மாநிலம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு வழங்கிய ரூ.1,000 உதவித் தொகை போதுமானதாக இல்லை. மாத உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். 100 பேரில் நான்கு மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற சட்டம் இருந்தபோதும், அதை நடைமுறைப்படுத்தவில்லை. கல்வித்தகுதி, உடல் குறைபாடு சதவீதம் போன்றவற்றின் அடிப்படையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். வாய்பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் செல்போன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.9-ம் தேதி மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடைபெறும் எனவும், அந்தப் போராட்டத்தில் திருவாரூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் ஏராளமானோர் பங்கேற்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

SCROLL FOR NEXT