Regional02

தி.மலை மாவட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் பள்ளிகளை திறக்க பெரும்பாலான பெற்றோர் விருப்பம் கல்வி துறை அதிகாரிகள் தகவல்

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளை திறக்க பெரும் பாலான பெற்றோர் விருப்பம் தெரிவித்துள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரோனா ஊரடங்கு அமலுக்கு வந்த நாளில் இருந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் மூடப் பட்டிருப்பதால், மாணவர்களின் கல்வி வெகுவாக பாதித்துள்ளது. தனியார் பள்ளிகள், தங்களது மாணவர்களுக்கு ‘ஆன்லைன்’ மூலம் பாடம் நடத்தி வருகிறது. ஆனால், அரசுப் பள்ளி மாண வர்களுக்கு தொலைக்காட்சிகள் வாயிலாக பாடம் கற்பிக்கப்பட் டாலும், அதில் மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை.

இந்நிலையில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பொதுத் தேர்வை நடத்த தமிழக அரசு ஆயத்தமாகி வருகிறது. இதையொட்டி, பள்ளிகளை திறந்து பாடங்களை நடத்த வேண்டும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி, பெற்றோரிடம் கருத்துக் கேட்கப்பட்ட பிறகு, பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அதனடிப்படை யில், தி.மலை மாவட்டத்தில் உள்ள 500 அரசுப் பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் மூலம் பெற்றோ ரிடம் கடந்த மூன்று நாட்களாககருத்து கேட்கப்பட்டது. அதில்,பெரும்பாலான பெற்றோர், பள்ளிகளை திறக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் அவர்கள் கூறும்போது, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பள்ளிகள் திறப்பது குறித்துபெற்றோரிடம் கருத்து கேட்கப்பட் டது. அப்போது, 50 சதவீதத்துக்கும் அதிகமான பெற்றோர், பள்ளி களை திறக்க ஆட்சேபனை தெரிவித் தனர். ஆனால், தற்போது கரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதால், பள்ளிகளை திறக்க பெரும்பாலான பெற்றோர் விருப்பம் தெரிவித் துள்ளனர். மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதால், பள்ளிகள் திறப்பது அவசியம் என கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் அரசு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என்றும், மாணவர்களின் நலனில் பள்ளி நிர்வாகத்துக்கும் அக்கறை இருக்க வேண்டும் என வலியுறுத்தினர். பள்ளிகள் திறக்கும்போது, கரோனா தடுப்பு விதிகளான முகக்கவசம் அணிதல், மாணவர்களிடையே சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை சுத்தம் செய்தல், மேஜை மற்றும் பென்ச்சுகளை தினசரி சுத்தம் செய்தல் போன்ற பணிகளில் பள்ளி நிர்வாகம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். பெற்றோரின் கருத்துக்களை பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்” என்றனர்.

SCROLL FOR NEXT