தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடந்து வருகிறது, யார் தவறு செய்தாலும், தமிழக அரசு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும், என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று பிரச்சாரம் மேற்கொண்டபோது அவர் பேசியது:
அதிமுக அரசைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு பேணிக் காப்பதில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. கட்சியானாலும் சரி, ஆட்சியானாலும் சரி, யார் தவறு செய்தாலும், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் அரசாக எங்கள் அரசு விளங்குகிறது. திமுக ஆட்சியில் கட்சிக்காரர்கள் தவறு செய்தால் அவர்களைக் காப்பாற்ற முயற்சிப்பார்கள். சட்டத்துக்கு எதிராக நடப்பார்கள். அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது.
சிறுபான்மை மக்களாக இருந்தாலும், பெரும்பான்மை மக்களாக இருந்தாலும் மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த அரசு பாதுகாப்பு வழங்கும். ஜாதிச்சண்டை, மதச்சண்டை இல்லாமல், அமைதிப்பூங்காவாக தமிழகம் விளங்குகிறது. தமிழகத்தில் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள 1.07 கோடி மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ளோருக்கு ரூ.80 ஆயிரம் கோடி கடன் வழங்கியுள்ளோம். திமுக ஆட்சியில் வெறும் ரூ.8 ஆயிரம் கோடிதான் தந்தார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
ஈரோடு மாவட்டம் அறச்சலூரில் நேற்று முதல்வர் பழனிசாமி பேசும்போது, “ஊழல் குற்றச்சாட்டு குறித்து நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா என நான் ஸ்டாலினுக்கு சவால் விடுத்தேன்.
அதற்கு நீதிமன்றத்தில் உள்ள வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டு வருமாறு ஸ்டாலின் கூறுகிறார். நீதிமன்றத்துக்கும் இதற்கும் என்ன தொடர்பு உள்ளது.
ஸ்டாலின் நேரில் வரட்டும். என்னென்ன குற்றம் செய்தோம் எனச் சொல்லட்டும். நாங்களும் பதில் சொல்கிறோம். எது சரி என மக்கள் தீர்ப்பு அளிக்கட்டும். மக்கள்தானே நீதிபதிகள்” என்றார்.