Regional01

மேட்டூர் உபரிநீர் திட்டத்துக்கு 6 கிமீ குழாய் பதிப்பு சேலம் ஆட்சியர் ராமன் தகவல்

செய்திப்பிரிவு

மேட்டூர் அணை உபரிநீரை 100 வறண்ட ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்துக்காக 6 கிமீ தூரம் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றுள்ளது என சேலம் ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.

மேட்டூர் அணை உபரிநீரைக் கொண்டு சரபங்கா வடிநிலத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு நீர் நிரப்ப மேட்டூர் உபரி நீர்த் திட்டம் ரூ.565 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் மேட்டூர் அடுத்த கோனூர் திப்பம்பட்டி பகுதியில் நீரேற்று நிலையத்துக்கு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியை சேலம் ஆட்சியர் ராமன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:

மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் போது, அணையின் இடது கரையின் நீர் பரப்பு பகுதியில் இருந்து உபரிநீரை கால்வாய் மூலம் திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையத்துக்கு கொண்டு சென்று அங்கிருந்து 940 குதிரைத் திறன் கொண்ட 10 மின் மோட்டார்கள் மூலம் நீரேற்றம் செய்து ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும்.

இத்திட்டத்தின் மூலம் 8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 12 பொதுப்பணித் துறை ஏரிகள், 1 நகராட்சி, 4 பேரூராட்சிகள் மற்றும் 83 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் குட்டைகள் என மொத்தம் 100 ஏரிகளின் பாசனப் பரப்பான 4,238 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

இத்திட்ட பணிகள் திப்பம்பட்டி முதல் எம்.காளிப்பட்டி ஏரி வரை முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளின் முழு ஒத்துழைப்போடு தனியார் நிலங்களில் சுமார் 6 கிமீ தூரம் குழாய் பதிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள 6 கிமீ தூரம் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பொட்டனேரி, எம்.காளிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 114 தனியார் நில உரிமையாளர்களின் பட்டா நிலங்களுக்கான அரசின் இழப்பீட்டு தொகை ரூ.5.07 கோடி வழங்கப்பட்டுள்ளது. கோனூர் மேற்கு மற்றும் கிழக்கு பகுதி தனியார் நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மேட்டூர் துணை ஆட்சியர் சரவணன், பொதுப்பணித் துறை நீர்வள ஆதாரத் துறை சரபங்கா வடிநில கோட்ட உதவி பொறியாளர் வேதநாராயணன், மேட்டூர் வட்டாட்சியர் சுமதி உட்பட பலர் உடனிருந்தனர்.மேட்டூர் உபரிநீரை வறண்ட 100 ஏரிகளுக்கு கொண்டு செல்லும் திட்டத்துக்காக, திப்பம்பட்டியில் நடைபெற்று வரும் குழாய் பதிக்கும் பணியை சேலம் ஆட்சியர் ராமன் ஆய்வு செய்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர் உள்ளிட்டோர்.

SCROLL FOR NEXT